இரை தேடல்

எந்த அசுமாத்தமும் இல்லாமல் மல்லாந்து கிடந்தது செத்துப்போன தெரு. அந்த இடத்தை ஒரு சிறிய நகரமாக்கும் வல்லமை அந்தத் தெருவுக்கு இருந்தது. மேற்கிலிருந்து ஓடிவந்து வடக்கே திரும்பிச் செல்லும் அந்தப் பிரதான தெருவுடன் கிழக்கேயிருந்து ஓடிவரும் சிறிய தெருவொன்று சங்கமிக்கும் அந்தச் சந்திதான் அந்தச் சின்ன நகரத்தின் பிறப்புக்கு வாய்ப்பானது.

கிழக்கிலிருந்து ஓடிவரும் சிறுதெருவுக்குச் சமாந்தரமாக, கிழக்கு மேற்காக ஒரு சிவப்பு வெள்ளை வரிகளோடு சூழ்ந்த மதில்கொண்ட பிள்ளையார் கோயில். கோயிலுக்கு எதிரே மேற்கிலிருந்து ஓடிவரும் பிரதான தெருவுக்குச் சமாந்தரமாக அதன் இடதுபுறத்தே விரிந்து கிடக்கும் பரந்த நிலத்தில் வெள்ளைக்காரன் காலத்தில் தாபிக்கப்பட்ட பிரபலம் பெற்ற மகளிர் கல்லூரி. கல்லூரியோடு சேர்ந்தேயிருக்கும் தேவாலயமும் பாதிரியார் வாசஸ்தலமும் முன்பள்ளியும். தெருச்சந்திப்பின் தெற்காக மிசனரிக்காரர் அமைத்த ஆண்கள் பாடசாலை. தேவாலயத்தையும் எதிரேயுள்ள சந்தையையும் பிரித்து ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியின் மருங்கில் பாற்கடை, பலசரக்குக்கடை, பான்ஸிக்கடை, சாப்பாட்டுக்கடை, காகிதாதிக்கடை என்று பலதும்.

இயல்பான நாட்களில் சந்தி களைகட்டியிருக்கும். பாடசாலைப் பிள்ளைகள், கோயிலுக்கு வரும் பக்தகோடிகள், மரக்கறி, மீன் தேடி சந்தைக்கு வரும் சாமானியர்கள், போத்தல்கள் சகிதம் பாற்கடை வாயிலில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள், மகளிர் பாடசாலை வாயிலையே வெறித்துப் பார்த்தபடி நோக்கற்று நிற்கும் தலைமுடிக்கு வர்ணம் தீட்டிய இளவட்டப் பொடியன்கள் என்று பரபரத்தபடியேயிருக்கும் சந்தி, இப்போது மௌனமாய் தூங்கிக்கிடந்தது. 

மீன் சந்தையை நம்பிச் சீவியம் நடத்துகின்ற, சிரங்கு பிடித்து உடலில் ஆங்காங்கே மயிர் கொட்டிய, தோலாய்ப்போன கட்டாக்காலி நாய்கள் தெருவோரத்தில் ஆங்காங்கே அட்டையாய்ச் சுருண்டு படுத்திருந்தன. தலையை உயர்த்திப் பார்த்துக் குரலெழுப்பி குரைக்கத் திராணியற்றுச் சுருண்டு கிடந்தன. 

'உப்பிடியே பார்த்துக்கொண்டிருந்தால் சரிவராதப்பா... பிள்ளையள் பாவம்... சில கடையளைத் திறந்து அவசியமான சாமான்கள் குடுக்கவிட்டிருக்கினமாம்... சண்முகம் கடையும் திறந்துதானிருக்கும். நிலமையைச் சொல்லி சண்முகண்ணன் கடையிலை அரிசி, பருப்பெண்டாலும் வாங்கிக்கொண்டு வாருங்கோவன். அவருக்கு எங்கடை நிலை தெரியும்தானே... நீங்கள் இதுக்கு முந்தியும், காலையிலை கடனுக்கு சாமான்கள் வாங்கி, பின்னேரம் வேலையாலை திரும்பி வரேக்கை காசு குடுத்திட்டு வாறனீங்கள்தானே... ஒரு நாளும் பிழை விடயில்லைத்தானே... கட்டாயம் தருவார்... தவணையைச் சொல்லிக் கேளுங்கோ... மறுக்கமாட்டார்... இண்டைக்கு வெளியிலை போறவைக்கு அடையாள அட்டையின்ரை கடைசி ‘நம்பர்’ இரட்டை இலக்கம் தானே... உங்கடை அடையாள அட்டை கடைசி இலக்கமும் இரட்டை இலக்கம்தானே… நீங்கள் வெளியிலை போய் வரலாம். வழிதெருவிலை பொலிசுகிலிசு மறிச்சாலும் சொல்லலாம்... சுடவே போயினம்?.. மறிச்சால் பிள்ளையளுக்குச் சாப்பாட்டுச் சாமான் வாங்கவெண்டு சொல்லிப்போட்டு போட்டு வாருங்கோ..."

மனைவியின் வேண்டுதலில் அடங்கியுள்ள தவிப்பை அசைபோட்டபடி, வைகாசிக் காற்றை எதிர்த்துத் தன் சைக்கிளை உளக்கியபடி, சண்முகத்தின் கடை முகப்புக்கே வந்துசேர்ந்துவிட்டான். எண்ணெய் காணாத அவனது சைக்கிளின் கிறீச் சத்தம் கேட்டு சுருண்டுகிடந்த நாயொன்று தலையை மிதத்தி அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு மீண்டும் சுருண்டது. 

கடை பூட்டியபடி கிடந்தது. ஏமாற்றமும் சைக்கிள் உளக்கிய கழைப்பும் சேர்ந்து, அவனுக்கு கண்களை ஏதோவொரு திரை மூடுவதுபோலிருந்தது. சண்முகத்தின் கடைக்கு எதிரே வீதியின் ஓரத்தில், ஒருகாலை நிலத்தில் ஊன்றி மற்றக்காலை சைக்கிளின் ‘பாரில்’ போட்டபடி திறக்கப்படாத கடையின் வாயிலைப் பார்த்தபடி நின்றான்.

அவனுக்கு நிழல்தந்த தேமா மரத்தின் உச்சிக் கிளையொன்றிலிருந்த காகம் ஒன்று போட்ட எச்சம் தெருவில் விழுந்து, ஊன்றிநின்ற காலில் மென்சூட்டோடு தெறித்தது. அருவருப்போடு சைக்கிளிலிருந்து குதித்திறங்கி, தெருவோரத்தில் குவித்துக்கிடந்த குப்பையிலிருந்த காகிதத் துண்டொன்றை எடுத்துக் காலைத் துடைத்துக்கொண்டான். சிறிய கல்லொன்றை எடுத்து எறிந்து காகத்தை துரத்திவிட்டான். 

ஏனோ வாயிலிருந்த வடையை காலில் வைத்துக்கொண்டு பாடிய காகத்திடம் ஏமாந்துபோன நரியின் கதை பட்டென்று ஞாபகத்தில் வந்து மறைந்தது!

சண்முகத்தின் கடை அவ்வளவு பெரிய கடையில்லை. நாளாந்த தேவைக்கான பொருள்களை இல்லையென்று சொல்லாது வழங்கிவரும் சில்லறை வியாபாரக் கடை. நாளாந்தம் வேலை முடிந்து போகும்போது வழியில் சண்முகத்தின் கடையில் இரண்டொரு ஆர்.வி.ஜி பீடிகள் வாங்கினால், மறுநாள் மாலையில் தான். காலைக் கடனுக்கு போகும் போது பற்றவைக்கும் பீடியை, கடன் முடிந்தவுடன் நெருப்பை அணைத்து காதுச்சோணையின் மேற்பகுதியில் செருகிவைப்பான். குறை பீடியை, வேலைக்குப் போகுமிடத்தில் தரப்படும் இடைத்தேனீரைக் குடித்த பின்னர் பற்றவைப்பான். அவனுக்கு பீடியைக்கூடச் சிக்கனமாக புகைக்கவேண்டியிருந்தது.

பீடி வாங்கும் வாடிக்கையால் சண்முகத்தாருக்கும் அவனுக்குமிடையே ஏற்பட்ட தொடர்பு காலப்போக்கில் ‘அந்தரத்துக்கு’ சாமான்கள் வாங்கும் தொடர்பாக வளர்ந்தது. நாளாந்தம் உடம்பை அடித்து பிள்ளைகளை வளர்க்கும் அவனிடத்தில் இருக்கவேண்டிய நேர்மை இருக்கவேண்டியதிலும் அதிகமாகவேயிருப்பதாக சண்முகம் கணித்துவைத்திருந்தார். அந்த நம்பிக்கையில்தான் வெளியே பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டையும் பொருட்படுத்தாது ‘மாஸ்க்’கை போட்டுக்கொண்டு வந்துசேர்ந்தான்.

சண்முகம் கடையின் ‘றோலிங் சட்டர்’ இழுத்து மூடப்பட்டு அடியில் நிலத்தோடு ஆமைப்பூட்டுகள் போடப்பட்டிருந்தன. கடையின் வெளிவிறாந்தையில் வைகாசிக்காற்று அள்ளிக்கொட்டிய சருகுகள் பரந்து கிடந்தன. அண்மையில் கடை திறந்து பூட்டியதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. 

றோலிங் சட்டர் சுருண்டு சேரும் பெட்டியின் மேல் விளிம்பில் இருந்த இடுக்கிலிருந்து பல குஞ்சுகள் சேர்ந்து கீச்சிடும் ஒலி, சதங்கையின் ஒலிபோல் கலகலத்ததுச் சிணுங்கியது. சற்று நேரத்தில் எங்கிருந்தோ பறந்துவந்த மைனா ஒன்று கடையின் முன்னே ஓடும் ரெலிபோன் வயரில் வந்து அமர்ந்து ஏதோ பரிபாசையில் அவசரமாக கத்தியது. மஞ்சள் சாயம் பூசிய அதன் உதடுகள் பிரிந்து எழுப்பும் ஒலியைக் கேட்டவுடன் உள்ளிருந்து இன்னொரு மைனா குதூகலத்துடன் வெளியே வந்தது ரெலிபோன் வயரில் இருந்து சேர்ந்து கீச்சிட்டது. முன்னர் வந்திருந்த மைனா இப்போது இடுக்கின் வழி நுழைந்து உள்ளே போனது. மீண்டும் உள்ளிருந்து சதங்கையொலி போன்ற குழந்தைக்குரல் கீச்சிடல்கள். அது உள்ளே போகும்வரை காத்திருந்த இது, வேகமாக எங்கோ பறந்தது. சற்று நேரத்தில் இது குதூகலத்துடன் திரும்பி வந்து ரெலிபோன் வயரில் அமர்ந்தபடி மஞ்சள் அலகை விரித்து மகிழ்ச்சிக் குரலெடுத்துக் கீச்சிட்டது. அது கேட்டு உள்ளே போன மைனா இடுக்கின்வழி வெளியேறி பறந்துவந்து மீண்டும் வயரில் அமர்ந்தது. வந்திருந்த மைனா உள்ளே போக, கிலுகிலுக் கீச்சிடல் குதூகலம் உச்சமானது. பின்னர், வெளியே வந்த மைனா உற்சாகத்துடன் கீச்சிட்டு எங்கோ பறந்தது. இப்படியே வருவதும் நுழைவதும் குதூகலிப்பதும் போவதுமாக தொடர்ந்தது. 

றோலிங் சட்டரின் மேற்புறப் பெட்டியின் இடுக்கில் ஒரு மைனாக் குடும்பம் எந்தக் கவலையுமின்றி குதூகலமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தாயும் தந்தையும் மாறிமாறி இரைதேடி குஞ்சுகளுக் ஊட்டி மகிழ்ந்து கொண்டிருக்கின்றன போலும்! 

நாளாந்தம் உழைத்துக் களைத்து வந்து, உழைத்த காசைக் கணக்குப் பார்த்துப் பிள்ளைகளைச் சந்தோசப்படுத்தும் தன் வாழ்வின் ஒருவித பரவசம் அந்த மைனாக்களில் தெரிவதாக உணர்ந்தான்.

அப்போது வெயிலில் நின்று கறுத்துப்போன, உடம்பில் எண்ணெய் வழுக்கேறிய ஒருவன், உள்ளே அணிந்திருக்கும் கட்டைக் காற்சட்டை கீழே தொங்க, அதன்மேல் சாரத்தை மடித்துக்கட்டியபடி, காலில் போட்ட செருப்பு தார்ச்சாலையை தேய்க்க நடந்து சென்றுகொண்டிருந்தான். அவன் கையில் இரண்டு பார்சல்கள் இருந்தன. அவை சாப்பாட்டுப் பார்சல்களாகத்தான் இருக்கவேண்டும். அவற்றை குழந்தையைப்போல நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நடக்கும் அவனைப் பார்த்துச் சுருண்டுகிடந்த நாயொன்று இரண்டு முறை இருமுவதுபோல குரைத்து, தன் உயிர்ப்பை உறுதிப்படுத்திக்கொண்டது. அவனும் இரைதேடிக்கொண்டுதான் போவான்போல என்று இவனது மனம் சொல்லிக்கொண்டது.

அவன் தன்னைப்போல ஒரு நாட்கூலிக்காரனா?.... அல்லது எங்காவது ஒரு சாப்பாட்டுக் கடையில் கழிவு இலைகளை அள்ளிக் கொட்டிச் சுத்தம் செய்துவிட்டு சிறியதொகைக் கூலியும் இரண்டு சாப்பாட்டுப் பொதிகளும் பெற்றுக்கொள்பவனா?... அல்லது பிச்சை எடுத்துச் சீவிப்பவனா?... என்றெல்லாம் சிந்திக்கத் தலைப்பட்டான் இவன்.

உள்ளேயிருந்து குஞ்சுகளின் குதூகலம் கேட்டபடியே.... மைனாக்களும் சலிக்காது போவதும் வருவதுமாயிருந்தன.

சண்முகம் கடை தொடர்ந்து மூடியபடிதான் இருக்கிறது என்பது நிச்சயமானது.  

சுழன்றடித்த காற்றொன்று சருகுகளை அள்ளி வீசியது. அலைக்கழிந்த சருகுகள் காற்றின் விசையால் தெரு நீளத்துக்குச் சுழியாய் ஓடியது. 

சந்தைப் பக்கம்கூட யாருமில்லை. சைக்கிளைத் திருப்பி வலிக்கத் தொடங்கினான். காற்றின் திசையிலே சைக்கிளுடன் அள்ளுண்டுபோனான்.

மீண்டும் மீண்டும் மைனாக் குஞ்சுகளின் குதூகலக் கீச்சிடல் காதில் கேட்டுக்கொண்டேயிருப்பதுபோல.... 

ஒருவேளை கடைகள் திறந்து வியாபாரம் செய்ய அனுமதித்துவிட்டால்... சண்முகம் கடையின் றோலிங் சட்டர் திறக்கப்பட்டுவிட்டால்.... உள்ளே குஞ்சுகள்?...

வீடு அண்மித்தது. சற்று நேரத்தின் முன்னர் அவனிடம் தொற்றிக்கொண்ட அந்தக் குதூகலம் வரண்டுபோனது. மனதை ஏதோ அழுத்துவதுபோல... மீண்டும் தன்வீட்டிலுள்ள குஞ்சுகளின் ஞாபகம். 'அரிசி, பருப்பெண்டாலும் வாங்கிக்கொண்டு வாருங்கோவன்" என்று அவள் சொல்லிவிட்டது...

                                                                                                                              ஜீவநதி-ஆடி,2021.


Comments

Popular posts from this blog