நன்றிக்கடன்

                                                                                                      இ.இராஜேஸ்கண்ணன்





கோமயம் கரைத்த மஞ்சள் நீரில் காலைக் கழுவி, தலைக்கு மேலாய் பட்டும் படாமலும் நீரை விசிறித் தெளித்து, வாயிலின் குறுக்கே கிடத்தியபடி போடப்பட்டிருந்த உலக்கையைக் கடந்து கொண்டு கொள்ளிவைத்த மகனைத் தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக உறவுக்காரர்களும் வீட்டு வளவினுள் நுழைந்தனர்.


கால்களுக்குள் தலைபுதைத்துக் கிடந்த இராமன் தலையை அண்ணார்த்திப் பார்த்தான். ஈனக்குரலால் மெல்ல அழுதான். மீண்டும் தலையை கால்களுக்குள் புதைத்து முனகலுடன் ஓய்ந்தான்.

கொள்ளிவைத்த மகனைக் கண்டதும் ஒரு சில பெண்கள் சிணுங்கியவாறு அவனைக் கட்டியணைத்துக் கொண்டனர். அவர்களை மெதுவாக விலக்கிக்கொண்டு நழுவியபடி வீட்டின் பின்னே அமைந்த குளியலறை நோக்கிச் சென்றான் அவன்.

அயல் வீட்டுப் பெண்கள் சிலர் சேர்ந்து நீரூற்றி வீட்டைக் கழுவிக்கொண்டிருந்தனர். சில பெண்கள் வீட்டின் வெளிப்புறத்தில் இருந்தபடி அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் கவலை தோய்ந்த ஒப்பனை தெரிந்தது. 

வீட்டு முற்றத்தில் அங்குமிங்கும் ஒழுங்கற்றுப் பரப்பப்பட்டுக்கிடந்த பிளாஸ்டிக் கதிரைகளில் களைத்துப்போன சலிப்பு மிஞ்ச உறவுக்காரர்களும்; வேறு சில புதிய முகங்களும் அமர்ந்திருந்தனர். அவர்கள் தம்முள் நோக்கம் எதுவுமின்றி பேசிக்கொண்டிருந்தனர்.

'இந்தப் பகுதியிலை இதைப்போலை ஒரு செத்தவீட்டை இது வரைக்கும் நாங்கள் பார்க்கயில்லை. அந்தமாதிரித்தான் செய்திட்டாங்கள். நினைச்சுத்தான் செய்திருக்கிறாங்கள் பொடியள். பிள்ளையளைவிட பேரப்பிள்ளையள் மனிசனிலை அளவுக்கு மிஞ்சின பாசம். யாருக்கும் வெளிநாட்டுப் பேரப்பிள்ளையள் உப்பிடி அழுது கலங்குங்களே?.... மக்கள் மருமக்கள் மட்டுமில்லை பேரப்பிள்ளையளும்... மனிசன் குடுத்து வைச்சவர்தான்"

'அந்தரச் செல்லையன்" குரலை உயர்த்தி புகழ்பாடினான். பேச்சுக்கிடையே செத்த சிவபுண்ணியத்தாரின் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இரண்டாவது மகனை ஓரக்கண்ணால் பார்த்து அவன் தன் பேச்சை கவனித்துக் கொண்டிருக்கிறானா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டான்.

செத்தவீட்டுச் செலவுக்கென கேட்கிற பணத்தை இளையமகன்தான் அள்ளி விசுறுகிறான் என்பதை அந்தரச் செல்லையன் அறியாமலில்லை.

செல்லையா அந்தரச் செல்லையனானதே செத்தவீட்டு அலுவல்களால் தான். ஊரில் யாருடைய செத்தவீட்டிலும் செல்லையன் அலுவல்காரனாக வந்துவிடுவான். செத்தவீட்டன்று கிரியைச் சாமான்கள் வாங்குவது தொட்டு அந்தியேட்டி வரையுள்ள முக்கியமான வேலைகளெல்லாம் அவனது பிரசன்னமின்றி நடக்காது. செத்தவீடு, காடாற்றுதல், எட்டுச்செலவு, அந்தியோட்டி எல்லாவற்றுக்குமான கிரியைகளை தானே செய்யுமளவுக்கு அனுபவஸ்தன். எல்லாம் அவன் விதித்தபடிதான் நடக்கும். செத்தவீட்டில் பிணத்தைத் தூக்கியபின் இடஞ்சுழியாக சுற்றுவாத? வலஞ்சுழியாக சுற்றுவதா? என்ற முடியாத விவாதம் தொடக்கம் பல விவாதங்களுக்கு அறுதியான பதில் அவனுடையதே. செத்தவீட்டில் குறிக்கப்பட்ட நேரத்தில் பிணத்தை தூக்கிவிடுவதில் தான் தன் அலுவலின் பெருமை தங்கியுள்ளது என்பதில் விடாப்பிடியாக நிற்பான். அதற்கான அவனது அவசரத்துக்கு கிரியை செய்யவரும் 'ஐயா"கூட கட்டுப்பட்டே ஆகவேண்டும். இதுவே செல்லையன் அவசரச் செல்லையனான தோம்பு.

'உண்மையிலை பெரியவன் பெரியவன்தான். புண்ணியத்தாரைக் கிடத்தின பேழைப்பெட்டியின்ரை பவிசென்ன... ஒரு தம்பி நினைச்சுப் பார்க்கேலாது. பவுணாலை செய்த பெட்டிமாதிரியெல்லே கிடந்துது. புண்ணியத்தாருக்கு கட்டின பட்டுவேட்டி மட்டும் பத்தாயிரம் பெறும். கிழவன் தன்ரை வாழ்நாளிலை அப்பிடி உடுத்திருக்குமோ தெரியாது. ஊரவங்கள் எல்லாரையும் மூக்கிலை விரலை வைக்கச் செய்திட்டாங்கள் பொடியள்."

அவசரச் செல்லையன் பொதுப்படையாகச் சொன்னபடியிருந்தான். அவன் சொல்லச் சொல்ல புண்ணியத்தாரின் இளைவயவனின் முகத்தில் ஒருவித பெருமிதம் வெளிப்பட்டுத் தொங்கிநின்றது. 

'அண்ணை... செல்லையா அண்ணை... சுடலையிலை எரிக்கிறாக்களை கவனிச்சனீங்களே?... எல்லாம் சரியாச் சொல்லியிருக்கிறியள்தானே...இந்தாங்கோ அண்ணை இதை வையுங்கோ பிறகு போகேக்கை அவையளை வடிவாக் கவனியுங்கோ.... பிறகு குறை சொல்லக்கூடாது... என்னண்ணை"...

புண்ணியத்தாரின் இளையமகன் செல்லையனின் கையை இழுத்து பச்சைநிறத் தாள்களைத் திணித்தான். பவ்வியமாக வாங்கி சட்டைப் பையில் பத்திரப்படுத்திக்கொண்டான். சுற்றியிருந்தவர்கள் தான் பணத்தை விசுறுவதை கவனிக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டான் இளையவன்.

பணத்தை வாங்கி சட்டைப்பையில் பவ்வியமாய் திணிக்கும்போதே குழைந்துநின்றான் செல்லையன். வெற்றிலைத் தட்டத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்திருந்தவர்களின் மத்தியில் அமர்ந்துகொண்டான். பேச்சுத்துணைக்கு தனக்கு வாய்த்த தோழன் நடராசனை இழுத்துக் கொண்டான். நடராசன் செல்லையனின் வால். சபை சந்தியில் நடராசனை விட்டால் செல்லையன்ரை கதைக்கு ஆமாப்போட வேறு யார் இருக்கினம்? இருவரும் வெற்றிலைசாறு நுதம்ப பேசிக்கொண்டார்கள்.

அவர்கள் அமரத் தெரிவுசெய்த இடத்துக்கருகே படுத்துக்கிடந்த இராமன் மீண்டும் மெதுவாகத் தலையை நிமிர்த்திப் பார்த்தான். அவனது கண்களால் வடிந்திருந்த நீர் கருங்கோடாய் காய்ந்திருந்தது. சற்று நலிந்திருந்தான். மேலும் பதற்றமானான்.

'நட்ராயா... இஞ்சை கேளன்... தம்பியவை தங்கடை பவரைக் காட்டிப் போட்டாங்கள். சும்மா எல்லாரும் பிடிக்கிற மாதிரி பறை மேளத்தைப் பிடிக்கேல்லை. பாண்ட்கோ~;டி!.. சும்மா விளாசித்தள்ளிப்போட்டெல்லே போறாங்கள். சந்தியிலை அவங்கள் வைச்ச சமாவைப் பற்றிக் கதைக்காத ஆக்களில்லையடா. சீனவெடி பதினையாயிரத்துக்கெல்லே வாங்கினது. பொடியள் தரவளியளுக்கு கொண்டாட்டந்தான். கொழுத்தித் தள்ளினாங்கள் பொடியள். சுடலையிலை உடைச்ச சோடாச் சுமை கண்டனிதானே.... கேஸ் கேசா இறக்கினாங்கள். வந்தவை மிஞ்ச மிஞ்சக் குடிச்சினம். திருவிழா மாதிரித்தான். புண்ணியத்தாற்றை பொடியள் மனமாத்தான் செய்யிறாங்கள்".....

சட்டைப்பையை தட்டி வாங்கின காசு பத்திரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டான் செல்லையன்.

'கேளன்.. நடா... மூண்டுநாளா பிரேதம் வீட்டிலை கிடந்துது. மூத்தவன் சுவிஸ். இளையவன் லண்டன். ரண்டுபேரும் உடனை வெளிக்கிட்டு வந்திட்டாங்கள். பிள்ளையளுக்கும் அங்கை பள்ளிக்கூடங்கள் லீவெண்டதாலை எல்லாரும் வந்திட்டுதுகள். பேரப்பிள்ளையளை கடைசிவரைக்கும் புண்ணியத்தார் நேரிலை காணப் புண்ணியம் செய்யேல்லை. எண்டாலும் அதுகள் எல்லாம் பிரேதம் எண்டுகூட பாக்காமல் நேற்று முழுக்க பேரனோடை செல்பிப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்ததுகள். பேரனிலை சரியான பாசம். பாவம் புண்ணியத்தாருக்குத்தான் குடுப்பினை இல்லாமல் போச்சுது."

இராமன் மீண்டும் அழத்தொடங்கினான். ஈனக்குரல் நீள ஒலித்தது. அவனால் புண்ணியத்தாரின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லைப் போல...

புண்ணியத்தாரின் மூத்தவன் குளித்து முடித்து வந்துசேர்ந்தான். 

'ராமா அங்கை போ. பின்னாலை போய் படு. ஆக்களுக்கை என்ன படுக்கை".... 

இராமன் மெல்ல எழுந்து வீட்டின் பின்புறம் போனான். அவன் வெகுவாகத் தளர்ந்திருந்தான். இந்த நான்கு நாட்களும் சரிவரச் சாப்பிட்டிருக்கமாட்டான் போல... நடையில் சோர்வு தெரிந்தது.

தங்கள் கைத்தொலைபேசியினுள் புதைந்திருந்த புண்ணியத்தாரின் பேரப்பிள்ளைகள் நால்வரும் இராமனைக் கண்டதும் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்த முனைந்து அவனை அருகில் அழைத்தனர். அவனோ அவர்களை இலட்சியம் செய்யாது நடந்தான். 

'செல்லையா அண்ணை என்னமாதிரி... நாளைக்கு ஒத்தைவிழ அஞ்சாம் நாள். காடாத்த வேணும். எல்லாத்தையும் பாத்துச் செய்யுங்கோ. போகேக்கை காசைத்தாறன். மறக்காமல் கேளுங்கோ. நீங்கள் நிக்கிறியள் எண்டுதான் நம்பியிருக்கிறம். எங்களாலை என்னத்தைச் செய்யேலும்... பாத்துச் செய்யுங்கோ காசைப் பற்றி யோசிக்க வேண்டாம். கூச்சப்படாமல் கேளுங்கோ"... 

புண்ணியத்தாரின் மூத்தமகன் செல்லையனுக்கு தலைப்பாக்கட்டினான்.

'தம்பி... ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ... எல்லாம் சிறப்பா நடக்கும். நட்ராயனையும் கொஞ்சம் கவனிச்சு விடுங்கோ... அவன்தான் எனக்குத்துணை. ரண்டுபேரும் சேர்ந்து எல்லாஞ் செய்வம். அந்தியேட்டி வரைக்கும் எல்லாம் சரிவர நடக்கும் தம்பி... எப்பிடியும் உங்கடை மரியாதை முக்கியம். தகப்பனின்ரை சிலவுகளை பிள்ளையள் எப்பிடிப் பாத்தாங்கள் எண்டு எல்லாரும் பேசுறமாதிரிச் செய்துவிடுவம். சரிதானே... என்ன செய்யவேணுமெண்டு மட்டும் சொல்லுங்கோ"....

அவசரச் செல்லையன் கிடைத்த மயிர் இடைவெளியில் மாளிகை கட்ட முனைந்தான்.

'அண்ணை... நாளைக்கு காடாத்தை முடிச்சுக்கொண்டு சிலவுக்கு நல்ல ஆடு ஒண்டைப் பாருங்கோ... சபை முடிஞ்சாலும் இரவு வாறவைக்கு கறியிருக்க வேணும். வந்து சாப்பிட்டவை ஒரு வரியத்துக்கு மறக்கக்கூடாது. மற்ற அயிற்றங்களும் தேவைப்படும். எங்கடை சினேகிதங்கள் கொஞ்சம் வரும். ஊர்ப் பொடியளும் நல்லா உதவிசெய்தவங்கள். அவங்களும் சந்தோசப்பட வேணும். நண்டு, கணவாய் அயிற்றங்களும் தாராளமாயிருக்கவேணும். அந்தியேட்டி வரைக்கும் எல்லாரும் நிக்கேலாது. நான் கொள்ளி வைச்சதாலை நிண்டு செய்வன். மற்றவை நிக்கிறது கஸ்டம். லீவு முடிஞ்சிடும். பிள்ளையளுக்கும் பள்ளிக்கூடங்கள். அதாலை எட்டுச் சிலவை நல்லாச் செய்யவேணும். எல்லாம் உங்கள் ரண்டுபேரின்ரை கையிலையும்தான்... பார்த்துச் செயய்யுங்கோ எல்லாம் கவனிக்கலாம்... எங்கடை செல்லையாண்ணைக்கு இல்லாததே"...

செல்லையன் புழுகத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டான். புளகாங்கிதம் அவனுக்கு.

இராமன் பின்னேயிருந்து முனகி அழும் சத்தம் மீண்டும் கேட்கின்றது. புண்ணியத்தார் அந்த பலாமரத்தின் கீழிருந்து பொச்சு அடித்துத் தும்பெடுக்கும் இடத்தைப் பார்த்தபடி அவன் குரலெடுத்து அழுகின்றான். குழப்பத்தோடு அங்குமிங்கும் நடந்தலைகின்றான்.

'தங்கச்சி... ராமன் அழுறான் என்னெண்டு பார். சாப்பாடும் அப்பிடியும் இப்பிடியுந்தானே... நாலுநாளா அவனுந் தன்ரைபாடு. நாங்களும் கவனிக்கயில்லை.... ஒருக்கா பாரணை பிள்ளை"... மூத்தவன் யாருக்கோ சொல்கிறான்.

இராமனின் அழுகை ஓய்ந்தபாடில்லை. 

புண்ணியத்தார் தும்படிக்கும் இடத்தைச் சுற்றிச் சுற்றி நடக்கின்றான். அந்த இடத்தில் படுத்து உழக்குகின்றான். புரளுகின்றான். உச்ச ஸ்தாயியில் அழுகின்றான்.

இளையவனின் மகள் தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த கேக் துண்டுகளில் ஒன்றை தட்டில்வைத்து இராமனுக்குக் கொடுத்தாள். அவன் அவளது உபசரிப்பை உதாசீனப்படுத்தினான். பிடிவாதமாகச் சாப்பிடாதிருந்தான்.

புண்ணியத்தார் அவனை வளர்த்த விதம் அப்படி. புண்ணியத்தாரின் வாழ்வோடு இராமன் இணைந்திருந்தான். 

'பிள்ளையள்... அவன் உதொல்லாம் சாப்பிடமாட்டான். உங்கடை பேரனார் வளர்த்த வளர்ப்பு அது. அவன் அயல் வீட்டிலைகூடச் சாப்பிடான். மனிசன் இருக்குமட்டும் தன்ரை சொந்தப் பிள்ளை மாதிரியெல்லே வளர்த்தவர். அவனும் அப்பிடித்தான். அவற்ரை சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்பான்" நான்தான் மெதுவாக வாய்திறந்தேன். 

புண்ணியத்தார் எழுதுவினைஞர் கடமையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் வீட்டிலை தனிச்சுப்போனார். அவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்தானே. அவர்களும் வெளிநாட்டிலை குடும்பங்களோடை நிரந்தராமாக வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். தந்தையாருக்கு மாதம் ஒருமுறை கைச்செலவுக்கு காசனுப்பிவைப்பார்கள். ஓய்வுபெற்ற கையோடு தங்களுடன் வந்துவிடுமாறு கேட்டிருந்தும் புண்ணியத்தார் அடியோடு மறுத்தவிட்டார். தன்னுடைய ஓய்வூதியப் பணத்திலேயே தன்வாழ்வைப் பார்த்துக்கொண்டார். பிள்ளைகள் அனுப்பிவைக்கும் பணத்தை சேமித்து ஊரிலுள்ள கோயில், சனசமூக நிலையங்களுக்கு அவசியமான செலவுகளுக்கு கொடுத்து உதவுவார். யாராவது வந்து திரும்புகின்ற தருணங்களில் பிள்ளைகளுக்கு உள்;ர் உணவுப்பொருள்களை வாங்கி பாசத்தோடு சேர்த்துப் பொதிசெய்து அனுப்பிவைப்பார்.

தனித்துப்போன அவரின் ஓய்வு வாழ்வில் அவருக்குத் துணை இராமன். அவனுக்குத் துணை அவர். 

புண்ணியத்தார் இராமனை கவனித்தவிதம் ஒரு பிள்ளையை வளர்த்தது போலத்தான். வாரத்தில் இரண்டு நாட்கள் குளிப்பாட்டுவார். துடைத்து பௌடர் போட்டுவிடுவார். மடியில் படுக்கவைத்து, மயிர்வகிர்ந்து உண்ணிபிய்த்து, சிரட்டையில் தணல் எடுத்துப் போட்டுச் சுடுவார். சனிக்கிழமைதோறும் எலும்பில்லாத தனித்தசையான இறைச்சிவாங்கி காய்ச்சி வைப்பார். மரத்தினால் சிறியதொரு இழுவை வண்டி செய்து இராமனின் கழுத்தில் பொருத்தி தெருவில் இழுத்தோடவைத்து சிறுவர்களுக்கு விளையாட்டுக் காண்பிப்பார். இடையிடையே வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று ஊசிபோட்டு வருவார். 

இப்போது இராமன் ஓர் ஓரமாகப் படுத்துக் கிடக்கிறான். அவனிடத்தில் இருந்த பதற்றம் குறைந்திருந்தது. கண்களில் குடிகொண்டிருந்த ஏக்கம் இன்னும் தெளிவாய்த் தெரிந்தது. அவனுக்கு முன்னே வைக்கப்பட்டிருந்த சாப்பாடு அப்படியே கிடந்தது. 

புண்ணியத்தாரின் பேரப்பிள்ளைகள் ஏதோவொரு வேற்றுமொழியைப் பேசிக் குரலெழுப்பிச் சிரித்தபடியிருந்தனர். வந்திருந்த புதிய முகங்கள் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் வாழ்ந்துவரும் நாட்டில் பாடசாலை விடுமுறை என்பதால் பேரனாரின் உடலையேனும் காணும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்திருந்தது.

அயல்வீட்டுக்காரன் என்பதால் புண்ணியத்தாரின் பிள்ளைகள் என்னுடன் நல்ல வாரப்பாடு. புண்ணியத்தாருடன் தொலைபேசியில் பேசும் போது என்னுடனும் இரண்டொரு தடவைகள் பேசியிருந்தனர். என்னில் ஒருவித மதிப்பும் வைத்திருந்தனர். தந்தையாரின் மனசை மாற்றி தங்களுடன் அனுப்பிவைக்க உதவுமாறும் கேட்டிருந்தனர். நானும் புண்ணியத்தாரோடு பேசிப்பார்த்திருந்தேன். அந்தத் தருணங்களில் பிள்ளைகளின் பிரிவினால் தான்படும் வேதனையை வெளிப்படுத்துவார். ஆனால், சொந்த மண்ணில் வாழ்வதிலுள்ள சுகத்தை விட்டுவிட முடியாது என்பார். 

புண்ணியத்தாரின் இளையவன் மாமா என விழித்தபடி என்னருகே அமர்ந்தான். நான் அவனோடு புண்ணியத்தாரின் நிiவுகளை மீட்டேன். 

புண்ணியத்தார் தனது கிளாக்கர் சம்பளத்தில் அவர்களை படிக்கவைத்தது. கல்வீடு கட்டியது. கடன்பட்டுத் தோட்டக்காணி ஒன்றை வாங்கி விவசாயம் செய்தது. சிக்கனமாய் வாழ்ந்து சேமித்த பணத்தைவைத்து உள்நாட்டில் பிரச்சினைகள் வலுத்துவிட்டகாலத்தில் பிள்ளைகளைப் பாதுகாக்க வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தது. இப்படிப் பேச்சுக்கள் தொடர்ந்தன. அவனது கண்களில் வியப்பு விரவிக்கிடந்தது.

இப்போதும் இராமன் பதற்றத்துடனேயே இருக்கிறான். முன்னரிலும் சோர்ந்திருந்தான்.  

'ராமன் புண்ணியத்தாருக்கு எவ்வளவு துiணாயா இருந்தவன். அவற்றை காலையே சுத்திக்கொண்டிருப்பான். புண்ணியத்தார் வீட்டிலை தும்படித்து சின்னளவிலை தும்புத்தடி செய்து வியாபாரம் செய்யிறவர். ஊர்க்கடையளிலை குடுத்து காசுவாங்கித் தன்ரை பென்சன் காசைச் சிலவழிக்காமல் சீவியம் நடத்தினவர் மனிசன். தனியாட்கள் குடுக்கிற ஓடருக்கு விளக்குமாறு, தும்புத்தடி செய்து கொடுக்கிறவர். நாங்கள்கூட அவரிட்டை ஓடர் குடுத்துத்தான் வாங்கிறனாங்கள். அவர் அந்த வேலையளைச் செய்யிற நேரங்களிலை இராமன்தான் அவருக்கு உதவி. அவர் தும்படித்துக்கொண்டிருக்க தண்ணியோடுற பத்தலிலை ஊறப் போடுற பொச்சு மட்டையளை ராமன்தான் வாயாலை கவ்வி எடுத்துவந்து கொடுப்பான். மதியச் சாப்பாட்டுக்கு ஒருமணி நேரத்துக்கு முன்னம் புண்ணியத்தார் வாடிக்கையாக செட்டியண்ணனிட்டை ஒண்டரைப் போத்தல் அடிப்பார். ரேஸ்ருக்காகக் கொண்டுபோற ரண்டு மீன்பொரியல் துண்டில் ஒன்றை ராமனுக்கு கொடுப்பார். திரும்பிவந்து சாப்பிட்ட பிறகு ஒரு குட்டித்தூக்கம் போடுவார். அவற்றை காலடியிலையே ராமனும் படுத்துறங்குவான். ஒருக்கால் புண்ணியத்தார் அப்பிடித்தான் செட்டியண்ணனிட்டை போட்டு வந்து வெளிவிறாந்தையிலை படுத்திருக்கிறார். அவர் உறங்கிப்போனார். தலைமாட்டிலை ஒரு வலுத்த விசப்பாம்பு. ராமன் இல்லையெண்டால் மனிசன் அண்டைக்கே முடிஞ்சிருப்பார். ராமன் எகிறிப் பாய்ஞ்சு தலையிலை ஒரு கால் வாலிலை ஒருகால் பிடிச்சபடி சத்தம்போடத்தான் செட்டியின்ரை சாமான் தந்த கீறிலை கிடந்த மனிசன் எழும்பி அயலிலை என்னையும் கூப்பிட்டார். நாங்கள் பாம்பை அடிக்கும்வரைக்கும் ராமன் தன்ரை காலை எடுக்கேல்லையெண்டால் பாரன். பாம்பை அடிச்சபிறகு ராமன் செய்ததை நினைச்சால் இப்பவும் எனக்கு கண்ணாலை தண்ணிவரும். பாம்பை அடிச்சதுதான் தாமதம் ஒடிவந்து புண்ணியத்தாரின்ரை காலை, கையை, உடம்பை எல்லாம் சந்தோசத்தோடை நக்கிக்கொண்டிருந்தான். அப்பதான் பார்த்தன் ராமன்ரை கண்ணிலையிருந்து கண்ணிர் வந்து கிடந்ததை. அண்டைக்கு புண்ணியத்தாருக்கு உயிர்குடுத்தவன் ராமன்தான்." 

நான் இதை புண்ணியத்தாரின் இளைய மகனுக்குச் சொல்லி முடிக்கும்போது அவனது கண்களில் மெல்லியதாய் ஒரு நீர்த்திசு படர்ந்தது. முகத்தில் ஏதோவொரு கழிவிரக்கத்தின் படர்வு தெரிந்தது. 

அவன் மெல்ல எழுந்தான். இராமன் இப்போதும் புண்ணியத்தார் தும்படிக்கும் இடத்திலேயே படுத்திருந்தான். அவன் படுத்திருந்த இடம் நோக்கிச் சென்றான். இராமனுக்கு அருகில் முழங்கால் குத்தி அமர்ந்தான். இராமனது பிடரிமயிரைத் தடவிக்கொடுத்தான். தலையிலிருந்து முதுகுத்தண்டு வழியாக இராமனது உடல் நீளத்துக்கும் தடவிக்கொடுத்தான். இராமனின் கண்களிலிருந்து வழிந்திருந்த நீர் கன்ன மயிரைக் கறுப்பாக்கியிருந்தது. 

அவன் துணுக்குற்றான். இராமனது உடலை அழுத்தித் தொட்டுப்பார்க்கின்றான். இராமனது உடல் குளிர்ந்துபோய்க் கிடந்தது. இராமனைத் தூக்கி தன் மடியில் படுக்கவைக்கின்றான்.  இராமன் மூச்சின்றிக் கிடந்தான். 

பந்தலில் போடப்பட்டிருந்த கதிரைகளில் அமர்ந்திருந்த அனைவரது பார்வையும் புண்ணியத்தாரின் இளையவன்மீது பதிந்தது.

இராமனை வாரி அணைத்தான்.

மெல்லியதாக அவனது மிடற்றில் எழுந்த விக்கல் படிப்படியாய் அழுகையாய் பெருகியது.

இருந்தவர்களெல்லாம் இளையவனையும் இராமனையும் சூழ்ந்துகொண்டனர்.

  


Comments

Popular posts from this blog