குப்பை
இ.இராஜேஸ்கண்ணன்
அவர்களுக்குப் புதிய உலகத்தைக் காண்பிக்கப்போகிறேன் என்ற ஒருவித இறுமாப்பு என் நெஞ்சை நிறைத்திருந்தது. நான் என்னுடைய அலுவலகப் பணி பணி என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் போதிலெல்லாம் வீட்டுக்குள்ளே ஒடுங்கிக்கிடந்தவர்களுக்கு இந்த நகரத்து வாழ்வுமுறை பிரமிப்பைக் கொடுக்கும். ஒரு கணவனாக எனது மனைவிக்கும் ஒரு தந்தையாக என்னுடைய பிள்ளைகள் இருவருக்கும் நான் கொடுக்கவேண்டிய உலக அனுபவங்களில் நிச்சயம் இதுவும் ஒன்று. இந்தச் தருணத்துக்காக அவர்கள் ஏங்கிக்கொண்டிருந்திருப்பார்கள். மனைவி என்னிடத்தில் அடிக்கடி சொல்லிக்கொள்வாள், பிள்ளைகளை எங்காவது வெளியே கூட்டிச்செல்லவேண்டும் என்று. அந்தக் கோரிக்கையினுள்ளே என்னவளின் உள்ளுறைந்த விருப்பும் ஒளிந்திருப்பதை அந்தக் கணங்களில் அவள் முகத்தில் மிதந்து தாழ்ந்த ஏக்க அலையில் கண்டுகொண்டவன். பாவம் அவள் சமையல், துப்பரவு, துணிதுவைத்தல், அலங்கரித்தல், தொடர்நாடகம் பார்த்தல் என்று நாளாந்த வாழ்வு செக்குமாட்டுத்தனமாக வெறுப்பைக் கொடுத்தபடி நகர்ந்தது. பிள்ளைகள்கூட பாடசாலை, ரியூசன் வகுப்புகள் என்று மாறிமாறி ஒரு தடத்தில் பயணித்து அலுத்துப்போனார்கள். அவர்களின் உலகம் சின்னதாய்ச் சுருங்கிப்போனது.
மாணவப் பருவத்திலிருந்தே பரந்துபட்ட உலக அனுபவங்களை பெற்றுக்கொண்ட எனக்கு, என் பிள்ளைகளுக்கு அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்க முடியாத அளவுக்கு பணிவாழ்க்கை பரபரப்பு மிக்கதாகிப்போனது. அது தானாக வந்து சேர்ந்துவிட்ட பரபரப்பா? அல்லது நமக்கு நாமே ஏற்படுத்தித் தப்பித்துக்கொள்ளும் தந்திரோபாயமா? என்பதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்குமளவுக்கு பொறுமையோடு காலங்கழிவதில்லை. என்ன வழிப்பட்டாயினும் இந்த ஆவணிமாத பாடசாலை விடுமுறைக்காலத்தில் மனைவி, பிள்ளைகளை தலை நகரத்துக்கும் ஏனைய சில பார்க்கவேண்டிய சிறப்பான இடங்களுக்கும் அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்று முன்கூட்டியே முடிவுசெய்துகொண்டுவிட்டேன். அந்தத் தீர்க்கமான முடிவு என் மனைவி பிள்ளைகளுக்கு வியத்தகு வினோதங்களைக் காண்பிக்கப்போகிறது.
நகரம் பரபரப்படையத் தொடங்கியிருந்தது. கால்களில் சில்பூட்டிய மனிதர்கள். ஓடுவதையே நடப்பதாகக் கொண்ட மனிதர்கள். வீதியோரக் கடைகளில் மழைக்காலத்தில் மின்குழிழ்களை மொய்க்கும் ஈசல்களைப்போல மொய்த்திருந்தனர். இரைச்சலால் நிறைந்திருந்த காதுகளில் நடைபாதைக் கடைக்காரர்களின் கூவல்களும் கூப்பாடுகளும் அபசுரமாய் குமைச்சல் தந்தன. மையப் பகுதி என்பதால், தற்பெருமையோடு நிமிர்ந்து நிற்கும் உயர்ந்த தொடர்மாடிக் கட்டடங்களிடையே நீளும் பாதைவழியே தெரிந்த கொஞ்சநஞ்சக் காற்று வெளிகளையும் நகரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணிக்கும் போக்குவரத்து வண்டிகளின் புகை நிறைந்திருந்தது. உஸ்ணக் காற்றுவெளி உடலை நசநசக்கவைத்தது. என் மனைவி, பிள்ளைகளின் முகங்களைப் பார்க்கிறேன் என்னுள் உண்டாகியிருந்த சலிப்பு அவர்களிடத்தில் தென்படவில்லை. அவர்களுக்குப் புதிய அனுபவந்தானே! வியப்பில் ஆழ்ந்திருப்பார்கள்போலும்!
என்னுள் ஏற்பட்டுவிட்ட சலிப்பு அவர்களைத் தொற்றிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயிருந்தேன். அவர்கள் சலித்துப்போனால் சுற்றுப்பயணத்தில் எனக்கான சுமையின் கனம் அதிகரித்துவிடும். அவர்களை மகிழ்வாக வைத்திருக்கவேண்டும் என்பதற்காகவே அவர்களுடன் கதையைத் தொடுத்தேன்.
'என்னடா குட்டி... எப்பிடியிருக்கு சிற்றி....ஆ...." சின்னவளைக் கேட்கிறேன்.
'நல்லாயிருக்கப்பா.... சுப்பர்...." தன் பாணியில் பதிலளித்தாள்.
'என்னம்மா சுப்பர்?.... என்ன பிடிச்சிருக்கு?...." அவளைப் பேசத் தூண்டினேன்.
'நிறைய ஆட்கள்!... நிறைய வாகனங்கள்!.... நிறையக் கட்டிடங்கள்!.... பெரிய கடைகள்!.....
எல்லாம் சுப்பர்தானே...." மகிழ்ச்சிபொங்கச் சொன்னாள்.
என்னுடைய சின்ன மகள் தன் வயதுக்கேற்ற உயிர்துடிப்புடன்தான் இருக்கிறாள் என்பதைப் உணர்ந்து கொண்டேன்.
'சிற்றியிலை ஆட்கள் நிறைய இருக்கிறதாலை வகை வகையாக இருப்பினம். நல்லவையும் இருப்பினம். கூடாதவையும் இருப்பினம். கள்ளரும் இருப்பினம். ஏமாற்றுக்காரரும் இருப்பினம். நாங்கள்தான் கவனமாக இருக்கவேணும். அப்பிடித்தான் ஒருக்கால் உங்கடை அப்பப்பா இந்தச் சிற்றிக்கு வந்து பஸ்சிலை போகேக்கை யாரோ அவர் வைச்சிருந்த மணிப்பேர்சை களவெடுத்துப் போட்டாங்கள்.... அந்தநேரத்திலை அவர் பட்ட கஸ்ட்டதைச் சொல்லி சொல்லி கவலைப்படுவார்.... நாங்களும் கவனமாயிருக்கவேணும் என்ன?... "
நான் சொல்லி முடிக்கவும் சின்னவள் அம்மாவேடு ஒட்டிக்கொண்டு நடக்கத் தொடங்கினாள். என் பிள்ளையிடத்தில் ஓர் எச்சரிக்கை உணர்வை ஊட்டிவிட்டதாக ஒரு திருப்தி.
'நீ சரியா நட குட்டி" என்று செல்லமாக சின்னவளை அதட்டிக்கொண்டே அதிருப்தியோடு என் முகத்தைப் பார்த்தாள் மனைவி.
நான் மூத்தவள் பக்கம் திரும்புகின்றேன். மெதுவாக அவளது மனநிலையை அறிய முனைகின்றேன்.
'அம்மு... நீ சொல்லன்..... பிடிச்சிருக்குதா சிற்றி?....."
'அப்பா... சிற்றியிலை திரியிற ஆக்கள் எல்லாரும் சிற்றியிலை நிரந்தரமா இருக்கிறவையில்லை என்னப்பா?..."
'ஏன் அப்பிடிச் சொல்லுறியள்?...."
'ஏனெண்டால்... வெளியிடங்களிலை இருந்து வேறை அலுவலுகளுக்காக வாறவை எண்டபடியால் தான் அவசர அவசரமாக அலுவலுகளை முடிக்க பறந்து திரியினம் போலை... எங்கடை ஜோகிறபி ரீச்சரும் சொன்னவ.... பெரிய சிற்றியளிலை சேருற கூடுதலான கழிவுகள் சிற்றியுக்கிள்ளை நிரந்தரமா இருக்கிறவையளாலை இல்லையாம்.... வெளியிலை இருந்து வந்து போறவையளாலை தானாம் சேருது...."
அவள் பதில் செல்லிமுடிக்கும்போது மனைவி என்னை நிமிர்ந்து பார்த்தாள்... அவளது பார்வையில் சமநேரத்தில் ஒரு பெருமையும் சின்ன ஏளனமும் தொனித்தது.
உரையாடிக்கொண்டே நடந்து வந்ததால் தூரம் தெரியவில்லை. நாங்கள் பிரதானமான நடைபாதைக் கடைத்தொகுதியை அண்மித்துவிட்டோம். நடைபாதைக் கடைகளில் நல்ல கொருள்கள் மலிவாகக் கிடைக்கும் என்பதால் மக்கள்கூட்டம் எப்போதுமே அதிகமாயிருக்கும்.
'சின்னவளை கையிலை பிடியும். சனத்துக்குள்ளை தவறவிட்டிடாதை. உன்ரை காண்ட்பாக் கவனம்." மனைவிக்கு எனது கட்டளை விசனத்தைத் தந்திருக்க வேண்டும். என்னை ஒருவகையாகப் பார்த்தாள். ஏதோ முணுமுணுத்துக் கொண்டாள்.
'அம்மு... அப்பாவுக்கு முன்னாலை நடவுங்கோ... சனங்கள் இடிச்சுக்கொண்டு போவினம்... இந்த இடத்திலை சாமான்கள் வாங்குறது கவனம்... வில்லங்கத்துக்குத் தலையிலை கட்டிப்போடுவாங்கள்.... சாமானைக் கையிலை வாங்கிப் போட்டால் காசைக் கறந்துபோட்டுத்தான் விடுவாங்கள்... காசு வாங்கினால் சிலர் மிச்சக் காசைக்கூடத் தரமாட்டாங்கள்.... கவனமாயிருக்கவேணும்.... என்ன?...."
மூத்தவளுக்கு சொல்வதைப்போல என் மனைவிக்கே சொல்லிவைத்தேன். முகத்தைப் பார்க்க முனைந்தேன். அவள் மறுபக்கம் பார்த்து சிரித்ததுபோலத் தெரிந்தது.
எனது முன்னெச்சரிக்கை உணர்வு எப்போதுமே அவளுக்கு ஏளனம்தான்!.....
நடைபாதைக் கடைகளின் வியாபாரிகள் பொருட்களை வாங்கச் செல்பவர்களின் கைகளைப் பிடித்திழுத்து பொருட்களைத் திணிக்கவில்லையேயொழிய மற்ற எல்லாவிதமான தந்திரங்களையும் செய்து தங்கள் பொருள்களை விற்றுவிட பகீரதப் பிரயத்தனம் செய்துகொள்வதாகவே எனக்குத் தெரிந்தது.
பிள்ளைகள் இருவரிடத்தில் மாத்திரமன்றி என் மனைவியிடமும் பொருட்கள் வாங்கும் ஆர்வம் கண்களின் வழியே கொப்பளித்தது. பொருள்களை தொட்டும், கையில் எடுத்தும் இரசித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நதரத்து வியாபாரிகளிடம் ஏமாந்துபோய்விடுவார்கள் என்ற பதற்றம் என்னுள் வரவர பூதமாய் பெருத்துக்கொண்டே போனது.
'அம்மு... சாமான்களைத் எடுத்துப் பாராதையுங்கோ... பிறகு கரைச்சல்... வாங்கிற சாமான்களை மட்டும் எடுங்கோ...." மூத்தவளுக்குச் சொல்வதைப்போல என் மனைவிக்குச் சொல்லிவைத்தேன்.
'விடுங்க சேர்... சின்னப் புள்ளைங்கதானே... ஆசைப்பட்டுப் பாக்கிறாங்க.... வாங்கலையின்னா காரியமில்லை... பாக்கட்டும் கொழப்பாதீங்க...." கொச்சைத் தமிழ் பேசினான்.
வியாபாரி எனக்குச் சொன்ன பதிலைக் கேட்டு என் மனைவி மீண்டுமொருமுறை மறுபக்கம் திரும்பிச் சிரித்துக்கொண்டாதாகவே தெரிந்தது. நான் எனது அதிருப்தியைக் காட்டலாமென எண்ணி அவளது முகத்தைக் குறிப்பாக பார்க்க முனைந்தேன் பொருட்களைப் பார்ப்பதுபோல பாசாங்கு செய்துகொண்டு நகர்ந்தாள்.
'அப்பா... எனக்கு அந்த கழுத்து மாலை வேணும்... ஸ்கூல்லை என்ர பெஸ்ட் பிரண்ட்ஸ_க்கு குடுக்கப்போறன்.... நாங்கள் ருவர் வந்த ஞாபகத்துக்கு.... வாங்கித்தாங்கோ.... வடிவாயிருக்கு...." சின்னவள் என்னைக் குடைந்தாள்.
நான் அவளைச் சுற்றுலாவுக்கு அழைத்துவந்த ஞாபகத்தைக் நண்பிகளோடு கொண்டாடத்தானே கேட்கிறாள். பாடசாலையில் அது தெரிந்தாலும் பெற்றாரைப்பற்றி நல்ல கணிப்பொன்று வரும்தானே. நான் வாங்கிக் கொடுப்பதாக முடிவெடுத்தேன். அவளுக்கு லோட்டஸ் ரவறில் ஏறிய புழுகம். துள்ளிக் குதித்தாள்.
பெண்பிள்ளைகள் கழுத்துக்கு அணியும் அழகான வகை வகையான மாலைகளை ஒரு காடசிப்படுத்தும் தட்டிலே பரப்பி தொங்கவிட்டு அந்தத் தட்டின் முதுகுப்புறமாக ஒரு ஸ்ராண்ட் பொருத்தி சாய்த்துவைத்து, தான் செல்லுமிடமெல்லாம் தன்னோடு காவிச்செல்லும் 'கடை" வைத்திருந்த அந்த வியாபாரி ஒரு பாம்பாட்டியைப் போல இருந்தான். தலையிலே சிவப்பு நிறச் சால்வை ஒன்றைச் சுற்றியிருந்தான். சாரத்தை முழங்காலுக்குச் சற்றுக் கீழாக நிற்குமாறு உயர்த்தி உடுத்தியிருந்தான். அவன் அணிந்திருந்த கோட் போன்ற மேலங்கி பொத்தான்கள் பொருத்தப்படாதிருக்க அதன் வழியே உள்ளே அணிந்திருந்த பச்சைநிற ரீசேட் தெரிந்தது. இடுப்பைச் சுற்றிக் கட்டப்பட்ட பட்டியொன்றில் பணத்தை வைக்க ஒரு சிறிய தோற்பை பொருத்தப்பட்டிருந்தது. இவ்வளவும் சேர்ந்து அவனது எண்ணைக்கறுப்பு உடலை யார் பார்த்தாலும் வெறுக்கவைத்தது. அவன் வைத்திருக்கும் மாலைகளில் அழகில் அவனது பயங்கரமான தோற்றம் ஒரு பொருட்டாக தெரியாத மறைந்து போனது.
'மாமா... எனக்கு ரண்டு சுப்பர் வடிவான மாலை தாங்கோ..." குட்டிதான் கேட்டாள்.
எண்ணை வழியும் அவனது கரிய முகத்தால் கருங்கல்லாய்ச் சிரித்தான்.
'நீங்களே பாத்து எடுத்திடுங்க... மகள்" என்றான். அவன் என் மகளை 'மகள்" என்று அழைத்தது எனக்கு வெறுப்பைத் தந்தது.
'அண்ணை... அந்தப் பிங் கலர் மாலையை எடுங்கோ பார்ப்பம்..." இது என் மனைவி. அவன் 'மகள்" என்று சொன்ன வெறுப்பில் நானிருக்க, இவள் 'அண்ணன்" உறவுமுறை கொண்டாடுகிறாள்.
'இந்தாங்க அக்கே... மருமகளிடை கழுத்திலை கட்டிப்பாருங்க.... அழகாயிருக்கும்...."
மாறிமாறி மகள், அண்ணை, மருமகள் என்று சொல்லச் சொல்ல அந்த வியாபாரிமீது எனக்குள் தோன்றிய வெறுப்பு விஸ்வரூபம் எடுத்தது.
'மாலையை எடுத்திட்டுக் காசைக் குடுங்கோ... போவம்... நேரம் போகுது... பார்க்குக்குப் போக பஸ் பிடிக்கவேணும்...."
எனக்குள் மூண்ட எரிச்சலை என் மனைவி உணர்ந்திருக்க வேண்டும். காண்ட்பாக்கை திறந்து ஆயிரம் ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தவாறே 'எவ்வளவு" என்றாள்.
'திறீ கண்ரட்" என்றான்.
'அவற்றை கோலத்துக்கு இங்கிலீஸ் வேறை வேண்டிக் கிடக்கு" வெளியே சொல்லாமல் எண்ணக்கொண்டேன்.
'சில்லறை இல்லை அக்கே.... கொஞ்சங் இருங்க... பணத்தை மாத்தி எடுத்திட்டு வாறே...." என்று சொல்லிக் கொண்டே பதிலுக்காக காத்திருக்காது சனக்கூட்டத்துள் கலந்துபோனான்.
நான் வெடவெடத்துப்போனேன். எனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை.
'படிச்சுப் படிச்சுச் சொல்லிக் கொண்டே வந்தன். கேட்டியளே.... இல்லை. ஏமாத்திப்போடுவாங்கள் கவனமெண்டு எத்தினைதரம் சொன்னன். முந்நூறு ரூபாக் காசுக்கு ஆயிரத்தை எடுத்து நீட்டிறா அவ. எல்லாம் முடிஞ்சுது. நடவுங்கோ... போவம். ஒரு நாளும் அறிமுகமில்லாதவனை மாமா... அண்ணை... எண்டு சொந்தங்கொண்டாடினால் உதுதான் நடக்கும். மாலையும் மேளமும்... பிரண்டஸ்ஸ_க்கு கட்டாயம் வாங்கிக் குடுத்துப் புழுக வேணுமே... கேக்கிறன். மிச்சம் எழுநூறு ரூபா ஆர் தாறது?... இண்டைக்கு மத்தியானச் சாப்பாட்டுச் சிலவுக்கும் இரவுச் சாப்பாட்டுச் சிலவுக்கும் போதும்.... குடுத்திட்டு நிக்கிறா... வெளிக்கிட்ட இடத்திலை கண்டவனையும் நம்பிறது. வெளிக்கிட்டு வெளியிடங்களுக்குப் போய்வந்தால்தானே..... வீட்டுக்குள்ளை கிடந்திட்டு வெளிக்கிட்டு வரேக்கை மற்றவை சொல்லிறதைக் கேக்கவேணும். எழுந்தமானத்துக்கு நடக்கக் கூடாது. அவ எனக்குப் போதிக்கிறா.... போதகர்.... வெளியாக்கள் சிற்றிக்கை குப்பை போடீனமாம்.... சிற்றியுக்கிள்ளையே குப்பையள் இருக்கு. இப்ப தெரியுதோ?... சரி நடவுங்கோ போவம். போதும் சாமான் வாங்கினது"
நான் பொரிந்துதள்ளிக் கொண்டிருந்தேன். மனைவியும் பிள்ளைகளும் தலை கவிழ்ந்து மௌனமாய் நின்றனர்.
சற்றுநேரம் அப்பிக்கொண்ட மௌன இடைவெளியைக் கிழித்துக்கொண்டு 'அக்கே... இந்தாங்க செவண் கண்ரட். மிச்சங். சொறி கொஞ்சம் லேட் பண்ணிட்டன்... என்னை 'மாமா" எண்டு கூப்பிட்டாங்க இந்தக் குட்டி மருமகள்.... அவவுக்கு கொஞ்சங் ஸ்வீட் வாங்கிட்டுவந்தேன்... புடியிங்க மருமகள்..." என்று கூறி சின்னவளின் கையில் இனிப்புக்களின் பொதியொன்றை பவ்வியமாய் திணித்து நின்றான்.
என் மனைவி என் முகத்தைக் குறிப்பாய் பார்க்க முனைந்தாள். நான் மறுபக்கம் திரும்பிக்கொண்டேன். அவளின் பார்வை எரிச்சல் மிகுந்ததா?.... ஏளனமானதா?..... திரும்பிப்பாரது நடக்கத் தொடங்கினேன். சின்னவள் எண்ணைக் கறுப்பனுக்கு நன்றிசொல்வது என்காதில் கேட்கிறது. அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்தார்கள்.
ஜீவநதி இதழ்: 152- வைகாசி 2021
Comments
Post a Comment