பாடகனின் மரணம்


ஒரு புள்ளியாகச் சுருங்கிப்போனார் பரத்தார். மரண ஊர்வலங்கள் எதுவும் இதுவரை அவரை இப்படிக் கருக்கியதில்லை. இதயத்தில் கனமேற்றியதில்லை. எத்தனை மரண ஊர்வலங்களில் பறை ஒலியைக் கிழித்துக்கொண்டு சர்வஜனங்களின் காதுகளைத் திழைக்கவைத்திருக்கும் அவர் பாடிய திருவாசகவரிகள். எத்தனை தருணங்களில் அவர்களின் பாடல்களை கேட்டிருக்கின்றேன்.

தன் குரலோடு ஓங்கி ஒலித்த சோடிக்குரல் மௌனமாகிப்போன இழப்பின் வலி ஒருபுறம். தன் நண்பனின் வாழ்வின் இறுதிநாள் குறித்த ஆசையை நிறைவேற்றிவிட முடியாத ஏமாற்றம் - ஏக்கம் - மறுபுறம்.

காலம் ஒருவனது வாழ்வின் கனவுகளை எப்படித் தூக்கிப் புரட்டிப் போட்டுவிடுகின்றது?

காதுகளைச் செவிடாக்கி இதயத்தின் சுவர்களை அதிரவைக்கும் ‘பாண்ட்’ ஒலியின் கொடூரம். அவர்கள் ஊதித்தள்ளும் ஊமைக் குழல்களின் அபசுரம். முகப்பிலே தாரைதாரையாக வெடித்துச் சிதறிடும் ‘சீனவெடிகள்’. முன்னே ஒருவாகனத்திலிருந்து கிளம்பிப் பரவும் ‘சனாய்’ ஓலஒலி. ஊர்வலத்தின் அந்தலையில் சோடாப் போத்தல்கள் சுமந்துவரும் வாகனத்தின் கர்ணகடூர இரைச்சல். இவற்றின் நடுவே தன்னையே தனித்துக் கொண்டு நகரமுடியாது முனகிச் செல்லும் அந்தியகால சேவைக்கான ‘வாகனம்’ ஒன்று. இவை எவற்றின் பாதிப்புமின்றி உறங்கிக் கொண்டிருக்கும் முகத்தார்.

“முகத்தானுக்கு முன்னம் நான் போய்ச் சேர்ந்திருக்கலாம். அவனுக்கென்ன கவலை. அறுவானின்ரை ஆசையெல்லாம் அலங்கோலமாப் போச்சுது. ஒரு பிள்ளை தன்னிலும் அவன்ரை ஆத்துமாவை புரியாமல் வளர்ந்து துலைச்சிட்டுதுகள். அதை நினைக்கத் தான்…”

பரத்தாரின் மனம் நிலைகொள்ளவில்லை. தன்னுடைய நண்பனின் வாழ்வு அர்த்தமிழந்துவிட்டதாக உணர்ந்து வேதனைப்பட்டுக் கொண்டார். ஊர்வலத்தில் வரும் மனிதர்களெல்லாம் இப்போது தசை எலும்புகள் கொண்டமரங்களாகவே அவருக்குத் தெரிந்தனர்.

“இந்த ஊரின்ரை பெரியமனிசரெண்டு வெள்ளையுஞ் சொள்ளையுமாத் திரியிற ஒருதனெண்டாலும் கதைச்சாங்களே. எனக்குச் சப்போட்டா கதைக்கவேண்டாம். அவன் பாவம் செத்துக்கிடக்கிற முகத்தானின்ரை விருப்பத்தை மனசிலை வைச்சாதல்…”

பரத்தாரும் முகத்தாரும் ‘இரட்டையர்கள்’. நட்பினால் மாத்திரமன்றி பாடும் தொழிலினாலும் தான். இந்த இரட்டையர்களுக்கு இவர்களின் சொந்த ஊரில் மட்டுந்தான் தொடர்புகள் என்று நினைத்துவிடக் கூடாது. பல ஊர்களிலிருந்தும் அவர்களைத் தேடிவருவார்கள். தங்களுடைய வீடுகளில் நிகழும் மரணச் சடங்குகள்,அந்தியேட்டிக் கிரியைகளில் பாடுவதற்கு தூர இடங்களிலிருந்து ‘கார்’ கொண்டுவந்து இவர்களை ஏற்றிச் செல்லுமளவிற்கு மிகுந்த பிரபலஸ்தர்கள்.

இவர்களில் முகத்தார் தான் முதன்மைப் பாட்டுக்காரன். பரத்தார் துணைப் பாட்டுக்காரன். சண்முகசுந்தரன் என்று முகத்தாரின் முழுப் பெயரைச் சொன்னால் யாருக்கும் அவரைத் தெரியாது. பரமலிங்கம் என்ற பரத்தாரின் பெயர் அவர் முகத்தாருடன் இணைந்து பாடத்தொடங்கிய பின் அவ்வாறு சுருக்கப்பட்டுவிட்டது.

பரத்தாருக்கு பிள்ளைகளில்லை. முகத்தாரின் பிள்ளைகள் நால்வரையும் தன்னுடைய பிள்ளைகளாகத்தான் நினைத்து வாழ்ந்தார்.  பிள்ளைகள் பிறந்ததிலிருந்து அவர்களின் துடக்குக் கழிவு, முடியெடுப்பு, காதுகுத்து, பிறந்தநாட்கள், சாமத்தியம், கலியாணம் எண்டு எல்லாத்திலும் ‘பரம் மாமா’ பிரசன்னமாகியிருப்பார். அப்படிஒரு குடும்பப் பிணைப்பு. முகத்தாரின் கடைசி மகளின் திருமணத்தின் போது ஏற்பட்ட பணக் க~;டத்தினை போக்கப் பரத்தார் தன்னுடைய மனைவியின் தாலிக் கொடியை அடகுவைத்துக் கொடுக்குமளவிற்கு அவர்களின் உறவு. இது எனக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியும்.

பரத்தார் அந்தியகாலசேவை வாகனத்தில் தனது வலதுகையை பிடித்தவாறு காரின் கண்ணாடி வழியே முகத்தாரின் உடலைப் பார்த்தார். பரத்தாரின் கண்கள் உடைப்பெடுத்தன. அவர் விக்கி அழும் சத்தத்தினை ‘பாண்ட்’ ஒலி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

“என்ரை முகத்தான்…என்ரை முகத்தான்…என்னமாதிரிக் கிடக்கிறான். வேட்டி, சால்வை, ந~னல் எண்டு…ஒரு சங்கீத வித்துவான் மாதிரி…அவனும் சங்கீத வித்துவான் தானே. பட்டம் இல்லாட்டில் என்ன…? அவனும் சங்கீத வித்துவான் தான். ஆர் மறுப்பினம்?...”

வாய்விட்டே சொல்லி அழுகின்றார் பரத்தார்.

முகத்தாருக்கு பாட்டு என்றால் உயிர். இளமைக்காலம் முதல் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற இந்தியப் பாடகர்களின் பாடல்களால் ஆகர்~pக்கப்பட்டவர். நண்பர்கள் மத்தியில் அவர்களின் பாடல்களைப் பாடி களிப்பூட்டி வந்த அவர் பாடகரான தருணம் மிகவும் உணர்வுபூர்வமானது.

“முகத்தான் என்ரை தாய்க்கு மூண்டு நாள் தொடர்ந்து பாடினவன்ரா…என்ரை தாயைத் தன்ரை தாயெண்டு தான் நினைச்சவன். அவன் பிரேதம் போகேக்கை,தொடர்ந்து பாடிக்கொண்டு வந்தவன்ரா…அது எங்களிலை அவன் வைச்ச அன்படா…அவ்வளவு பாசம்…வாழ்நாளிலை மறவன்ரா” என்று பரத்தார் எனக்கு ஒருமுறை சொன்னது இன்றும் ஞாபகமிருக்கிறது.

பரத்தாரின் தாய்க்கு அந்தியகாலத்துப் பாடல்கள் பாடியதிலிருந்துதான் முகத்தார் பாடகரானார். முகத்தாருக்கு கண்களில் ஒரு செல்லவாக்கு கவிஞர் கண்ணதாசன் போல. அகன்ற நெற்றி சௌந்தராஜனைப் போலத் தான். காதுகளில் நீண்டு வளர்ந்த முடி. மீசை இல்லை. பாடும் தருணம் தவிர்த்து எப்போதும் வாய் நிறைந்த வெற்றிலை. பின்னோக்கி பகவதர் பாணியிலே சற்று நீள வளர்ந்த முடி. மாறுகரை வேட்டி. ந~னலை ஒத்த அரைக்கை சேட். நெற்றியில் இடம் வலமாய் இழுக்கப்பட்ட சந்தன ரேகையின் நடுவில் மெல்லிய குங்கும ரேகை. பாடும் தருணங்களில் அவரின் இடதுகையில் வரும் ஒருவித நளின அசைவு மறக்க முடியாதது.

ஊரறிந்தவரை அவர் யாரிடமும் சங்கீதத்தை முறைப்படி கற்றவரல்ல. அது கடவுளின் கொடை என்று பலரும் கூறிக்கொள்வர்.. அந்தியேட்டியில் சுண்ணப்பாடல் பாடுகின்ற தருணங்களில் ராகமாலிகை செய்யும் அவரின் பாணியை இரசிக்காதவர்கள் யாருமில்லை. பிரலாபப் பாடல்களைப் பாடும் தருணங்களில் வி.வி.வைரமுத்துவின் மயானகாண்டம் மனத்திடை விரிந்து காட்சியாய் வரும்.

மரண ஊர்வலங்களில் முகத்தாரும் பரத்தாரும் ஓங்கி ஒலிக்கும் குரலில் மாறிமாறித் திருவாசகப் பாடல்களைப் பாடும் போது கூட இராகங்கள் பிசிறுவதில்லை. இறந்துபட்டவர் எத்தகையவராயினும் அவர்களின் பாடல்களால் புனித ஆன்மாக்களாக மாறிவிடுவார். இதுதான் அவர்களின் பாடலுக்கான அந்தஸ்து. 

முகத்தார் மரண வீட்டில் பாடுபவர் என்பதால் ஊரில் அவரை யாரும் நிராகரிக்கவில்லை. கோயில்களில் நடைபெறும் கிரியைகளில் கூட இவர் ஒரு ஓதுவார்தான். சங்கீதத்தில் தேர்ந்தவர்களோடு சமதையாக இருந்து தேவார திருவாசக புராணப் பாடல்களை முற்றோதுவார்.

“அறுவான் என்னை விட்டிட்டுப் போறான். நான் இனி என்ன செய்யப்போறன். குரலடங்கிப் போய் போறான். இனி எப்ப அவன்ரை பாட்டைக் கேக்கிறது. தான் வித்துவான் இல்லையெண்டாலும் மூண்டு பெட்டையளையும் சங்கீதத்திலை பட்டம் எடுக்க வைச்சிட்டான். மூத்தவளின்ரை பிரியன் கூட இந்தியாவரை புகழுள்ள சங்கீதக்காரன்…பொடியன் ஒரு ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பு வேலை செய்யிறவன். எல்லாம் இருந்தும் என்ன பிரியோசனம். அவன் ஏமாத்தத்தோடைதான் போறான்…நான் என்னசெய்ய…விட்டாங்களே.. விடாப் பிடியா நிக்கிறாங்கள்… ‘ஸ்ரேற்ரஸ்’ வேணுமாம்… ‘ஸ்ரேற்ரஸ்’… இந்தக் கோதாரிதான் ‘ஸ்ரேற்ரஸ்’ எண்டால்?...”

பரத்தார் கொதித்துக் கொண்டே சொன்னார். அவரின் கொதிப்பு உள்ளத்தில் எரிமலையாய்க் கனன்றது.

தந்தையின் நண்பன் என்பதைவிட ஒரு சித்தப்பன் ஸ்தானத்தில் நடந்தவர் பரத்தார். அவரின் கொதிப்பு நியாயமானதுதான். உள்ளுர் மேடைகளில் அவர்கள் இருவரும் பாடிய தருணங்களில் ஒருவர் மாறி ஒருவர் ‘ஹார்மோனியம்’  மீட்டுவார்கள். மூத்த பெண்பிள்ளைகள் இரண்டு பேருக்கும் அழகான பாவாடை சட்டைபோட்டு அரங்கிலே இருத்திப் பாடவைத்து அழகு பார்த்தார்கள். அப்படி அழகு பார்த்த பெண்பிள்ளைகளின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் முகத்தாரோடு பரத்தாரும் இருந்தார்.

“மூத்த பெட்டையள் ரண்டுபேரும் உப்பிடிப் பேசுவாளள் எண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை. இப்ப அவைக்கு வசதி, புகழ் வந்திட்டுது. அந்தநேரம் அவன் பாவி செத்தவீட்டிலை அந்தியேட்டிலை பாடிவாங்கின கொஞ்சகொஞ்ச காசிலை தான் உவேன்ரை படிப்புகளை பார்த்தான். க்ரப்பட்டு கூலிவேலை செய்து சாப்பாடுபோட்டான். அவ்வளவு லட்சியம் அவனுக்கு. உதுகள் எல்லாத்தையும் மறந்துபோட்டுதுகள். தெருவிலை பாடக்கூடாதாம்…அது தகப்பன்ரை கௌரவத்தை குறைச்சுப்போடுமாம்… வெளியாக்கள் வருவினமாம் தங்களை ஒருமாதிரி நினைப்பினமாம்…அதுகள் பழையமுறையளாம்…”

எல்லாவற்றையும் பழையது பழையது என்று நிராகரித்துவிட்டு புதியதைக் கூட புத்திசாலித் தனமாக ஏற்பதாக பாசாங்கு செய்கின்ற ஒரு அரைவேக்காட்டு நிலையின் பிரதிநிதிகளாக இருக்கும் முகத்தாரின் பிள்ளைகள் குறித்த பரத்தாரின் சினம் வெளிப்பட்டது.

அவமானப்பட்ட அந்தத் தருணம் நானாகவிருந்தால் இந்த இடத்திலை தொடர்ந்து நின்றிருக்கமாட்டன். பரத்தார் பாவம் நண்பனின் பாசத்தில் கட்டுண்டு தலைகவிழ்ந்து நடந்து கொண்டிருந்தார்.

முகத்தாரின் உடல் காரில் ஏற்றப்பட்டவேளை சீனவெடிகள் சிதறின. ‘பாண்ட்’ குழுவினர் அறையத் தொடங்கினர். அந்தியகாலசேவை வாகனம் மெதுவாய் உருளத் தொடங்கியது. உறவுகளின் கூக்குரலின் நடுவே ‘தொல்லையிரும் பிறவி சூழும் தளைநீக்கி அல்லல்…’ என்று பரத்தார் குரலெடுத்து கண்ணீரோடு அழுதழுது பாடத்தொடங்கினார்.

“மாமா…நிற்பாட்டுங்கோ…உதுவேண்டாம்…கவலையெண்டால் அழுங்கோ. பாடவேண்டாம் ‘பாண்ட்’ இருக்கு. பறைமேளம் கூட நாங்கள் பிடிக்கேல்லை. மரியாதையா போகட்டும் அப்பா…உள்ளுக்கை கிரியை நடக்கேக்கை பாடினீங்கள் தானே. வேணுமெண்டால் அந்தியேட்டிக்குப் பாடலாம் நிற்பாட்டுங்கோ…”

பரத்தார் இடிந்துபோனார். அவமானம். ஏமாற்றம். தோல்வி. இவற்றில் எது இது…? புரியவில்லை அவருக்கு.

“பிள்ளையள் இப்ப நான் காசுக்குப் பாடவரயில்லை. கொப்பன் எனக்குச் சொல்லி வைச்சிருக்கிறான். நான் முன்னஞ் செத்தால் தான் பாடுவன் எண்டும், தான் முன்னஞ் செத்தால் நான் பாடவேணுமெண்டு. நான் என்னசெய்ய…”

ஓங்கி அழுதுகொண்டே கேட்டார் பரத்தார்.

“நிற்பாட்டுங்கோ…”

ஒரு சொல்லில் யாவும் முடிவானது.

அப்போது தலை கவிழ்ந்தவர் தான். காரின் கண்ணாடிவழியே நண்பனைப் பார்த்துப் பார்த்துக்கொண்டு நடக்கின்றார்.

இடுகாட்டின் வாயிலில் ‘பாண்ட்’ நிசப்தமானது. சோடாப் போத்தல்கள் மூடிதிறக்கப்பட்டன. கொள்ளிக்குடம் உடைத்துக் கொள்ளிவைத்தாயிற்று. வந்தவர்களும் உறவுகளும் படிப்படியாய் கலைந்தனர். பிணம் சுடுபவர்கள் தயாராகின்றனர். பரத்தார் இடுகாட்டு நிழல்மண்டபத்தில் கைகூப்பியபடி தன் நண்பனை வளர்த்தியிருந்த சிதையைப் பார்த்தபடி இருக்;கின்றார். திருவாசகவரிகள் மிக ஒடுங்கிய ஸ்தாயியில் கேட்கின்றன.

                                                                                                                    ஜீவநதி- ஐப்பசி, 2013


Comments

Popular posts from this blog